காப்பி ரைட்

Fake History என்ற தலைப்பில் என்னிடமே இரண்டு புத்தகங்கள் உள்ளன. வெவ்வேறு ஆட்கள் எழுதியவை. வெவ்வேறு பதிப்பகங்கள் வெளியிட்டவை. ஒரு புத்தகம் வரலாற்றிலுள்ள 10 பொய்களைப் பற்றி விளக்குவது. செங்கிஸ்கான் ஒரு கொடுங்கோலன், ஐரோப்பாவுக்குக் கறிக் குழம்பு இந்தியாவிலிருந்து வந்தது போன்ற விஷயங்கள். இன்னொன்று வரலாற்றிலுள்ள 101 பொய்களைப் பற்றி விளக்குவது. இதுதான் உலகின் முதல் செல்ஃபி, இதுதான் உலகின் முதலில் எடுக்கப்பட்ட பூனையின் புகைப்படம் போன்ற விஷயங்கள். இரண்டு புத்தகங்களுக்கு இரண்டு பேர் ஒரே தலைப்பை வைப்பதெல்லாம் காப்பி ரைட்டில் வராது என்கிறார்கள். புத்தகங்களின் காப்பி ரைட் உள்ளே இருக்கும் சரக்கைப் பொறுத்தது. நான் பள்ளிபடித்த காலத்தில் வகுப்பாசிரியர் “குமார்” என்றால், “உள்ளேன் ஐயா”, என்று குறைந்தது பத்து பேர் கையைத் தூக்குவார்கள். பிள்ளைக்குப் பெயர்வைத்தவர்கள் மேல் காப்பி ரைட் போட முடியாது. சினிமா டைட்டில்கள் போல பிரச்சனைகள் புத்தகங்கள், பிள்ளைகளுக்கெல்லாம் கிடையாதாம். சினிமா டைட்டில்களுக்கும் பிரச்சனை காப்பி ரைட் இல்லை, ட்ரேட் மார்க்தான் பிரச்சனை என்கிறார்கள். (சங்கங்கள் வேறுவித பிரச்சனை. சட்டம் அனுமதித்தாலும் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் அனுமதிக்காமலிருக்கலாம்.)

பொன்னியின் செல்வன் என்ற தலைப்பில் 2005-லேயே ஒரு படம் வந்தது. இன்றைய தேதியில் பொன்னி என்ற பெயர் கொண்ட ஒரு பெண்ணின் பையன் ஒருவர் (அந்த பெண் தன் பையனுக்கு வைத்த பெயர் ‘செல்வன்’) தன் சொந்த வாழ்க்கைக் கதையை ‘பொன்னியின் செல்வன்’ என்ற தலைப்பில் படமாக எடுக்கவோ, ஐந்து பாகக் கதையாக எழுதவோ முடியுமா? 

‘You can win’ என்று யார் வேண்டுமானாலும் யாரைப் பார்த்து வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், அதற்கு ஒருவர் பல நாடுகளில் ட்ரேட் மார்க் வாங்கி வைத்திருந்தார். ஷிவ் கேரா என்ற அவர் (புத்தகக் கடைகள் பக்கம் சென்ற) 90s கிட்ஸ்களுக்குப் பிரபலமானவர். அதே தலைப்பில் வேறு ஒருவர் புத்தகம் எழுத வேண்டுமென்றால் அவரிடம் சென்று அனுமதி வாங்க வேண்டும் அல்லது அந்த ட்ரேட் மார்க் செல்லாது என்று கோர்ட்டில் போய் சில லட்சங்கள் செலவழித்துச் சண்டை போட வேண்டும். ஆனால், இந்த ட்ரேட் மார்க்குக்கு ‘கன்டீஷன்ஸ் அப்ளைட்’. சந்தா செலுத்தி புதுப்பித்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும். ட்ரேட் மார்க் வாங்கியவர் அதை உபயோகித்துக் கொண்டிருக்கவும் வேண்டும். இல்லாவிட்டால் அது காலாவதியாகிவிடும்.  ஆனால், இந்த ட்ரேட் மார்க் எந்தெந்த நாட்டில் உயிரோடு இருக்கிறது, எந்தெந்த நாட்டில் காலாவதியாகிவிட்டது என்பது அந்தந்த நாடுகளைப் பொறுத்த அடுத்த சிக்கல். எந்தெந்த நாடுகளில் அது எந்தெந்த சட்டநிலையில் (legal status) இருக்கிறது என்று அந்தந்த நாடுகளில் தேடிக் கண்டுபிடிப்பது அடுத்த சிக்கல். அதற்கு பணம் வேண்டும். உலகச் சட்டம், உலகளாவிய தீர்ப்பு, உலகளாவிய காப்பி ரைட், உலகளாவிய காப்புரிமை என்று எதுவும் கிடையாது. அந்தந்த நாட்டு கோர்ட்டுகளில் சண்டை போட வேண்டும். அமெரிக்காவில் ‘You can win’ என்ற தலைப்பிற்கான ட்ரேட் மார்க் வாங்கிய ஷிவ் கேரா அதை அங்கே தொடர்ந்து உபயோகிக்காததால் அது அங்கே இறந்துவிட்டது. அதனால் அதே தலைப்பில் நான் இப்போது ஒரு புத்தகம் எழுதலாமா? நோஷிர்பான் மர்ஸ்பானி (?) என்று இன்னொரு சுயமுன்னேற்ற குரு தன்னை முன்னேற்ற அதே ‘You can win’-க்கு சென்ற ஆண்டு ட்ரேட் மார்க் வாங்கி வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாராம். புத்தகத்திற்குத் தலைப்பு வைக்கும் முன் இவர் யாரென்று முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.

இசைக்கருவிகளைப் படைப்பது ஒன்றும் சாதாரண விஷயம் கிடையாது. இசையைப் படைப்பது ஒரு திறமை என்றால், இசைக்கருவிகளைப் படைப்பது இன்னொரு திறமை. வேறொருவரின் படைப்பாற்றலில் உருவான இசைக்கருவிகளைக் கொண்டு இன்னொருவர் அருமையான இசையைப் படைக்கிறார். இந்த இசை யாருக்குச் சொந்தம்? பெயின்டைத் தயாரித்தவர் எல்லாம் பிகாஸோவின் ஓவியத்திற்கு உரிமை கோர முடியாது என்பார்கள். பிற்போக்குச் சிக்கலில் சிக்கிக்கொள்ளும் வாதம் இது. ருசியான டீயைப் போட்டவரைப் பாராட்டும் உலகத்திற்கு அந்த டீ டம்ப்ளரை வடிவமைத்தவர் யாரென்றே தெரியாது.

ஒருவர் பொய்ச் செய்தியைப் பரப்புகிறார். எதிக்ஸ் என்பதைத் தாண்டி அதுவும் ஒரு படைப்புதான். நாம் நம்பிக்கை என்று சொல்லும் சிலபல விஷயங்கள் பொய்ச் செய்திகள்தான். நம்பிக்கைகளில் நமக்குள்ள நம்பிக்கையே கேள்விக்குரியதுதான். பக்திப் பாடலுக்குக் காப்பி ரைட் வாங்கலாம். அந்த பக்தி உண்மையா, பொய்யா என்பதெல்லாம் காப்பி ரைட் வாங்க அவசியமில்லை.

இன்றைய ஏஐ உலகில் இந்த காப்பி ரைட் விஷயங்கள் இன்னும் தெளிவில்லா நிலையை நோக்கி நகர்கின்றன. ஏஐ ஒன்றை ஏவி விட்டு இன்று ஓவியம், சினிமா, இசை, கவிதை என்று எல்லாம் ‘நம்மால்’ படைக்கமுடிகிறது. இதற்கு யாரிடம் காப்பி ரைட் உண்டு? அமெரிக்காவில் கோர்ட் கேஸ் என்று வரும். அதற்கு அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வரும். அந்த தீர்ப்பை காப்பியடிப்பார்கள். தீர்ப்புகளுக்கு காப்பி ரைட் உண்டா? மனித சமூகத்தில் நியாயம் என்பதே காப்பியடிப்பதுதான். 

‘Who owns this sentence?” சிந்திக்க வைக்கும் புத்தகம். பண்டைய காலங்களில் படைப்புகளெல்லாம் இறைவன் கொடுத்தது, இயற்கை கொடுத்தது என்று தாங்கள் படைத்தவைக்குத் தங்கள் பெயரைக் கூட போடாமல் விட்டுவிட்டார்கள். சங்க இலக்கியங்கள் உதாரணம். பண்டைய உலகில் படைப்புகளெல்லாம் இப்படிதான் இருந்திருக்கிறது. அதிலிருந்து இவருக்குதான் இந்த உரிமை என்று நகர்ந்த காலத்தில் படைக்கப்பட்ட சட்டங்கள் எல்லாம் பெரிய விவாதங்கள் ஏதுமின்றிப் புகுந்திருக்கின்றன. இந்த சட்டங்கள் உலகளவில் காப்பியடிக்கப்பட்டிருக்கின்றன. படைப்பு = பணம் என்ற நிலைக்கு எப்படி வந்தோம்? இந்த பதிவு பேஸ்புக்குக்குச் சொந்தமா, எனக்குச் சொந்தமா? தக் லைஃப் போல சென்று கொண்டிருக்கிறது. நிறுத்திவிடுகிறேன்.