விமானப் பயணம்

ஹங்கேரி நாட்டின் புதபெஸ்ட் (Budapest) நகரிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு காட்டுக்குள் கடுந்தவம் செய்து கொண்டிருந்த மனைவியின் தவத்தைக் கலைக்க ஒரு விமானத்தில் நேற்று ஏறினேன். சுவிட்சர்லாந்திலிருந்து புதபெஸ்ட் நகரம் நோக்கிய பயணம். தனியாக விமானத்தில் பயணம் செய்யும் போதெல்லாம் பொதுவாகவே ஏதாவது சம்பவம் நடந்துவிடுகிறது. விமானம் ஒரு மணிநேரம் லேட். சுவிட்சர்லாந்திலிருந்து ஓர் இளைஞர் பட்டாளம்.


புதபெஸ்டில் வார இறுதியைக் கொண்டாடக் கிளம்பியிருப்பார்கள் போல. பகலை விட இரவு வெளிச்சமாக இருக்கும் ஒரு பார்ட்டி நகரம் புதபெஸ்ட். இரவு வந்துவிட்டால் சின்ராசுவைக் கையில் பிடிக்கமுடியாது என்பது போன்ற நகரம். ஏற்கனவே சில கவளங்கள் பீரை முடித்திருந்தார்கள் அந்த இளைஞர்கள். ஒரு மணிநேரம் லேட்டானதால் வேறு வழியில்லாமல் இன்னும் சில கவளங்கள். 

போர்டிங் ஆரம்பித்தது. போர்டிங் பாஸில் இருக்கும் || |||| || |||-ஐ விமானம் ஏறும் முன் ஒரு கேமராவில் ஸ்கேன் செய்வார்கள். சிலபேர் அது உண்மையிலேயே கேமரா என்று புன்முறுவல் பூத்த தங்கள் முகத்தைக் காண்பிப்பார்கள். இந்த இளைஞர்கள் காட்டிய போர்டிங் பாஸைப் பார்த்து ஸ்கேன் செய்து கொண்டிருந்த ஆள் நான்கு அடி பின்வாங்கிவிட்டார். கிரிக்கெட் மேட்ச் முடிந்ததும் ஆள் சைஸில் ஒரு செக்கை ஆட்ட நாயகனுக்குக் கொடுப்பார்களே, அப்படி ஒரு செக்கைக் கொண்டுபோய் வங்கியில் காண்பிப்பது போல் இவர்கள் ஆளுயர ஃப்ளெக்ஸ் பேனர் சைஸில் போர்டிங் பாஸைக் காண்பித்தார்கள். விமான டிக்கட்டை விட டிக்கட்டை பிரின்ட் போட அதிகம் செலவழித்திருக்கிறார்கள்.

அந்த இளைஞர்கள் அத்தனை பேருக்கும் விமானத்தில் கடைசி இரண்டு வரிசை சீட்டுகள். மாப்பிள்ளை பெஞ்ச். விமானத்தில் ஏறிவுடனேயே வாங்கி வந்த பாட்டில்களைத் திறந்தார்கள். உடனே அறிவிப்பு வந்தது: “விமானத்தில் வெளியே இருந்து வாங்கி வந்த மதுபானங்களைக் குடிக்கக்கூடாது. அவற்றை சைடில் வைத்துவிடுங்கள். விமானத்தில் கொடுப்பதை மட்டுமே அருந்த அனுமதி உண்டு”. நல்ல பிள்ளைகளாக எல்லாவற்றையும் மூடி வைத்துவிட்டு விமானப் பணிப்பெண்களிடம் விமானத்தில் கொடுக்கப்படுவதைக் கேட்டார்கள். விமானம் கிளம்பியதும் தருவோம் என்று நகர்ந்துவிட்டார்கள். 

விமானம் கிளம்பியது. பக்கத்திலிருந்தவர்களெல்லாம்  அகமதாபாத்தை நினைத்து பிதா சுதன் போட்டுக் கொண்டு உயிர் பயத்தில் இருந்தார்கள். மாப்பிள்ளை பெஞ்சில் இருந்த ஒருவருக்கு பயத்துக்குப் பதிலாக ஒண்ணுக்கு வந்துவிட்டது. சிறிய விமானம் என்பதால் பின்னால் டாய்லெட் கிடையாது. மொத்த விமானத்தையும் கடந்து வந்து முன்னால் வரவேண்டும். டேக்-ஆஃப் என்பதால் டாய்லெட்டுகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவரால் அடைத்து வைக்க முடியவில்லை. முன் பக்கம் வரை டொனால்ட் டக் போல நடந்து வந்துவிட்டார். விமானம் வானில் சாய்வாக எழும்ப, இவருக்கு தண்ணீர் கேனைச் சாய்த்து அண்டாவில் ஊற்றுவது போல டேங்க் வேகமாக நிரம்ப ஆரம்பித்துவிட்டது. நான் முதல் வரிசையில் டாய்லெட் அருகே உட்கார்ந்திருந்தேன். இவர் என் பக்கத்தில் நின்று மெர்லின் மான்றோ போல போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். என்ன ஆனாலும் வாயை மட்டும் திறந்துவிடக்கூடாது என்று கைகளால் என் வாயைப் பொத்திக் கொண்டேன். அசம்பாவிதங்கள் நடப்பதற்குள் விமானம் வானத்தை அடைந்து டாய்லெட்டும், டாய்லெட்டுக்குள் அவர் டேங்கும் நல்லபடியாக திறக்கப்பட்டது. 

விமானம் ஆஸ்பத்திரி எதற்குள்ளும் நுழையாமல் வானத்துக்குள் நுழைந்துவிட்டதால் பயணிகள் நிம்மதியாக மூச்சுவிட ஆரம்பித்து ஐந்து நிமிடங்கள்தான் ஆகியிருக்கும். நான் முதல் வரிசையில் இருந்ததால் என்ன நடந்தது என்று சரியாகத் தெரியவில்லை. தலைமை விமானப் பணிப்பெண் பின்னால் இருந்து வேகமாக நடந்து வந்து என் முன்னால் இருந்த மைக்கை கையில் எடுத்தார். கொஞ்சம் வயதான பெண்மணி. அவர் ஆங்கிலத்தில் பேசியதை அப்படியே மொழி பெயர்க்கிறேன். 

“பின் வரிசையில் இருப்பவர்கள் கவனத்திற்கு. இது வெள்ளிக் கிழமை இரவு என்பது எனக்குத் தெரியும். நீங்கள் எல்லாம் புதபெஸ்ட்டில் கொண்டாட்டம் போடச் செல்கிறீர்கள் என்றும் தெரிகிறது. நீங்கள் இறங்கியதும் உங்கள் கொண்டாட்டங்களைத் தொடருங்கள். இரண்டு மணிநேரம் மட்டும் உங்கள் கொண்டாட்டங்களைத் தள்ளி வையுங்கள். உங்கள் கொண்டாட்ட மனநிலைக்கு இந்த விமானப் பயணம் தடையாக இருப்பதற்காக வருந்துகிறேன்,” என்றார். அந்த சொற்பொழிவுக்கு மாப்பிள்ளை பெஞ்சிலிருந்து அதற்கு என்ன ரியாக்‌ஷன் வந்தது என்று தெரியவில்லை. வாயில் பிரம்பைச் சுழற்ற ஆரம்பித்தார் அந்த பெண்மணி. 

“கடைசி இருக்கைகளில் உட்கார்ந்திருக்கும் உங்கள் யாருக்கும் எந்த ஆல்கஹாலும் பரிமாறப்படாது. இதற்கு மேல் உங்களிடம் இருந்து ஏதாவது சத்தம் வந்தாலோ, சகபயணிகளைத் தொந்தரவு செய்தாலோ, என் சக ஊழியர்களை வம்புக்கிழுத்தாலோ இந்த விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிவிடும். விமானத்தைத் திருப்பி தரையிறக்குவதற்கான எல்லா உரிமையும் சட்டப்படி என்னிடம் இருக்கிறது. அப்படி நான் இந்த விமானத்தைத் தரையிறக்கினால் மீதமிருக்கும் உங்கள் வாழ்க்கை முழுவதும் இந்த நாளுக்காக வருந்துவீர்கள்.“ விமானத்தில் பயணித்த அத்தனை பேரும் கைதட்டினார்கள்.

மைக்கில் முகமெல்லாம் கோபத்தில் செக்கச் சிவக்கப் பேசிமுடித்த அந்த விமானப் பணிப்பெண்ணின் முன்னே அமர்ந்திருந்த முதல் ஆள் நான். மாப்பிள்ளை பெஞ்சை அடி வெளுத்துவிட்டு முதல் பெஞ்ச் பக்கம் பார்வையைத் திருப்பும் எட்டாம் வகுப்பு டீச்சர்தான் ஆழ்மனதின் முன் தோன்றினார். தன் முக உணர்ச்சிகளை அடுத்த நொடியே மாற்றிவிட்டு என்னிடம் புன்சிரிப்புடன், “சிக்கன் குருமா, அரிசி சாதம் இருக்கிறது. சாப்பிடுகிறீர்களா?” என்றார். நம் கலரைப் பார்த்து ஜோக்கடிக்கிறார் என்று நினைத்தேன். உண்மையிலேயே அந்த விமான மெனுவில் அது இருந்தது. “கூட குடிக்க ஏதாவது வேண்டுமா?” என்றார். “விஸ்கி ஏதும் கலக்காத சோடா மட்டும் கொடுங்கள்”, என்றேன்.

பயணத்தின் சுவாரசியங்கள் அதோடு முடித்து வைக்கப்பட்டு அமைதியான இரண்டு மணிநேரத்துக்குப் பிறகு விமானம் தரையிறங்கியது. இறங்கியதிலிருந்து வெளியே வந்து டாக்ஸி பிடிக்கும் வரை அந்த இளைஞர்களைத் தேடினேன். அவர்கள் இறங்கியதற்கான அறிகுறியே இல்லை.


JK