இன்றைய உலகில் இதுவரை இல்லாத புதிய பொருட்களை உருவாக்க மூன்று விஷயங்கள் தேவை. முதலாவது, இதுவரை தயாரிக்கப்படாத அந்த புதிய பொருள் என்ன என்று யோசிக்கும் கற்பனைத்திறன், படைப்பாற்றல் திறன் வேண்டும். இரண்டாவது, அந்த கற்பனைப் பொருளைத் தாயாரிப்பது அறிவியல் விதிகளின் படி சாத்தியமா இல்லையா என்ற அடிப்படை அறிவியல் தெரிந்திருக்க வேண்டும். (பூமியால் ஈர்க்கப்படாத ஒரு விமானத்தைக் கற்பனை செய்யலாம். ஆனாலும் அதை பூமி ஈர்க்கும் என்ற அறிவியல் தெரிய வேண்டும்.) இரண்டும் இருந்தால் எதையும் சாத்தியமாக்கும் தொழில்நுட்பம் இன்று இருக்கிறது. ஆனால், தொழில்நுட்பம் என்று வந்துவிட்டால் பணம் தேவை. அதனால், மூன்றாவது, அந்த பொருள் மனிதர்களுக்குப் பிரயோசனமாக, ஒரு தேவையைப் பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும். இருந்தால் அதற்கான வியாபாரம் இருக்கும் என்று நம்பி பண முதலீடுகள் கிடைக்கும். இந்த மூன்றும் சரியாக இருந்தால் அந்த பொருள் மனிதர்கள் கைகளில் கூடிய சீக்கிரம் இருக்கும்.
வெறும் பணம் மட்டும் சம்பாதிக்க வேண்டுமென்றால் இது எதுவும் தேவையில்லை. எந்த பொருளையும் புதிதாக உருவாக்க வேண்டியதில்லை. எனர்ஜியே தேவைப்படாத ஜெனரேட்டர் என்று ஒரு கற்பனை எந்திரத்தை மனதில் உருவாக்கினால் போதும். அதற்கும் இயற்பியல் விதிகளுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கலாம். அப்படி ஒரு ஜெனரேட்டர் இருக்கிறது என்று ஆணித்தரமாக ஏஐ-யை வைத்து படங்கள், வீடியோக்களை உருவாக்கலாம். அதை யூட்யூபில் போட்டு ஆயிரம் பேரைப் பார்க்க வைக்கலாம். கூடவே இதைக் கண்டுபிடித்தது நம் ஆள் என்று தேச, மொழி, மத இன்னபிற பக்திகளைக் கோர்த்துவிட்டால் பார்க்கும் சில ஆயிரம் பேர் பல லட்சம் பேராவார்கள். பலபேர் பார்த்ததை வைத்து அவருக்குப் பணம் கிடைத்துவிடும். அடுத்து நம் விஞ்ஞானிகள் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் இல்லாத தண்ணீரைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்று அடுத்த வீடியோவுக்குப் போய்விடுவார். இந்த கண்டுபிடிப்பைப் பார்த்து அமெரிக்கா, சீனாவெல்லாம் வாயடைத்துப் போயிருக்கின்றன என்பார். அதையும் ஒரு லட்சம் பேர் வாயைப் பிளந்து பார்ப்பார்கள். உணர்வுகளைப் பொங்க விடுவார்கள். இப்படி ஒரு நாட்டுக்கும் (வீடியோ, ரீல்ஸ் போடுபவர் தவிர) யாருக்கும் பிரயோசனமில்லாத விஞ்ஞான உலகத்தை இன்றைய சோசியல் மீடியா உருவாக்கி வைத்திருக்கிறது.
முதல் பத்திக்கு மறுபடி வருகிறேன். சமீபத்தில் என்னை ஆச்சரியப்படுத்திய ஒரு புதிய படைப்பு. எளிதான நான்கு விஷயங்கள். இவற்றை இணைத்தால் ஒரு புதிய படைப்பு கிடைத்துவிடும்.
மேலே உள்ள நான்கு பாயின்டுகளையும் இணைத்தால் ஏதாவது பொறி தட்டுகிறதா? பட்டுவிலுள்ள புரோட்டீனுக்கும், நம் இதயம் நுரையீரலிலுள்ள எலாஸ்டின் புரோட்டீனுக்கும் வித்தியாசம் ஒரு சில அமினோ ஆசிடுகள் மட்டுமே என்பது ஆச்சரியம். இந்த இரண்டையும் கோடிங் செய்யும் டிஎன்ஏ-களை இணைத்தால் எலாஸ்டிக் தன்மையுடைய, அதே சமயம் பட்டு போல் இயற்கையால் மட்கக்கூடிய, அதே சமயம் தறி, மிஷினெல்லாம் போட்டு நெய்யத் தேவையில்லாத ஒரு துணி கிடைத்துவிடும். இந்த செயற்கை டிஎன்ஏ-யை நம் வயிற்றில் வாழும் இ. கோலை (E. coli) என்ற பாக்டீரியாவை வெளியே எடுத்து அதற்குள் செலுத்தினால் போதும். அது இயற்கையாக இந்த புதிய துணியைத் தயாரித்துத் தந்துவிடும். இதை SELP என்கிறார்கள். Silk Elastin Like Proteins.
டிஎன்ஏ-களைப் பிரித்து இணைத்து புதிய புரோட்டீன்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பம் பல ஆண்டுகளாக இருக்கிறது. இங்கே தேவைப்பட்டதெல்லாம் பட்டுப் பூச்சியையும் இதயம், நுரையீரலையும் இணைத்து யோசிக்கும் சங்கம் லெவல் கற்பனை. மெஞ்ஞானப் பாதையில் செல்லாமல் கொஞ்சம் விஞ்ஞானப் பாதையில் சென்ற கற்பனை. இந்த பொருள் தயாரிக்கப்’பட்டு’விட்டது. ஒரு ஸ்டார்ட்-அப் கம்பெனி கண்டுபிடித்த இதை வணிகமாக்க சிலபல கோடிகள் முதலீடுகள் நடப்பதாக சென்ற மாத MIT Technology Review பத்திரிகையில் ஒரு கட்டுரையையும், கூடவே ஏஐ தயாரித்த ஜெனரேட்டரை வைத்துக் கொண்டு ரீல் விட்ட ஒரு வீடியோவையும் வாசித்துப் பார்த்ததால் இந்த பதிவு.