‘பேரரசரின் புதிய ஆடை’ என்ற ஆங்கிலக் கதையை எல்லோருக்கும் பள்ளிக்காலங்களில் யாராவது சொல்லிக் கொடுத்திருப்பார்கள். தாங்கள் தயாரித்த ஆடை முட்டாள்களின் கண்களுக்கு மட்டும் தெரியாது என்று ஓர் அரசரை ஏமாற்றி அவரை நிர்வாணமாக ரோட்டில் வலம் வரவைத்தார்கள் இரண்டு ஏமாற்றுக்காரர்கள். அவர் நிர்வாணமாக இருக்கிறார் என்று சொன்னால் தாங்கள் முட்டாளாகிவிடுவோம் என்பதால் சுற்றியிருந்த எல்லோரும் ஆடை பிரமாதம் என்றார்கள். கடைசியில் ஒரு சிறுவன் வந்து, “ஐயே…இந்த அரசருக்கு ஆடை இல்லை” என்று சிரித்தான். ஒற்றே வரி, ஒற்றே அடி! அரசருக்கு அவர் அடிவாங்கிவிட்டது தெரிந்துவிட்டாலும் கெத்தை விட்டுக் கொடுக்கக்கூடாது என்று நிர்வாண ஊர்வலத்தைத் தொடர்ந்தாராம்.
மேலே உள்ள கதை கிபி நான்காம் நூற்றாண்டில் சொல்லப்பட்ட ஒரு பௌத்த கதை. குமாரஜீவா என்ற பௌத்த அறிஞருக்கும், அவரது குருவான பந்துதத்தா என்பவருக்கும் மஹாயான பௌத்தத்தைப் பற்றி நடந்த ஒரு விவாதத்தில் உவமையாக சொல்லப்பட்ட கதை. இந்த கதை பௌத்த மதத்துடன் உலகெங்கும் சுற்றிக் கடைசியில் ஆங்கிலக்கதையாக நமக்குத் திரும்பி வந்தது.
1990-களில் அன்னா க்வின்ட்லென் என்ற பத்திரிகையாளர் இந்த கதையை அரசியல் நையாண்டிக்காக உபயோகித்தார். விலை உயர்ந்த ஆடைகளணியும் பழக்கம் கொண்டிருந்த ஓர் அரசியல் தலைவரைப் பார்த்து, “ஐயே…இந்த ஆடைக்குள் அரசர் இல்லை”, என்றார்.
1990-களில் எங்கள் வீட்டில் ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ (Reader’s Digest) பத்திரிகையைத் தபாலில் சந்தா கட்டி வாங்கிக் கொண்டிருந்தார்கள். RD-காரர்கள் ‘ஃப்ராங் ஆலன்’ என்பவர் தொகுத்த ஒற்றையங்கள் (one liner - ஒற்றை வாக்கியங்கள்) அடங்கிய புத்தகம் ஒன்றை ஜெய்க்கோ நிறுவனத்தைப் பதிப்பிக்க வைத்து இலவசமாக சந்தாதாரர்களுக்கு அனுப்பிவைத்தார்கள். கசங்கிப் போய் அலமாரியில் கிடந்த அதை ஊருக்குச் சென்றபோது இஸ்திரி போட்டு என்னுடன் கொண்டுவந்தேன். அதில் வாசித்ததுதான் மேலே சொன்ன ஆடை பற்றிய அரசியல் நையாண்டி.
இந்த இலவசப் புத்தகத்தின் முதல் பக்கத்தில், “இந்த புத்தகத்தை யாரும் விற்கவோ, புத்தகக்கடைகளில் அல்லது ஸ்டால்களில் வைக்கவோ, வியாபார நோக்கத்துக்காக பயன்படுத்தவோ கூடாது”, என்று போட்டிருக்கிறார்கள். சோசியல் மீடியாவில் எழுதக்கூடாது என்று போடவில்லை. 1990-கள். (அந்தகால காப்பி ரைட் அக்ரீமென்டுகளின் பிரச்சனையும் இதுதான். அக்ரீமென்ட் போட்டவர்களின் ஆயுட்காலத்திற்குள்ளேயே உலகம் மாறிவிட்டது. இருந்தும் கற்கவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை போடப்பட்ட எந்த அக்ரீமென்டிலும் ஏஐ என்ற வார்த்தை இருந்திருக்காது . ஏஐ காப்பியடித்தால் யார் சட்டையைப் பிடிக்க வேண்டும் என்று இப்போதுதான் யோசிக்கிறார்கள்.)
அதனால், அந்த புத்தகத்திலிருந்து என்னைக் கவர்ந்த சில ஒற்றையங்களைத் தமிழ்ப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.
“மும்மொழியெல்லாம் பள்ளியில் கற்றுக் கொடுத்தால் எத்தனை மொழிகளில்தான் மனைவியிடம் இருந்து திட்டு வாங்குவது?”
“யாரும் கேள்வியே கேட்காவிட்டாலும் பதில் சொல்பவர்கள்தான் வரலாற்று ஆசிரியர்கள்.”
“காமம் கொள்ளும் முன் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். ஏனென்றால், காமம் கொண்டபின் பேச வேண்டியிருக்கும்.”
“காதலுக்குக் கண் இல்லை. கல்யாணத்திற்குக் கண் மட்டும்தான் உண்டு.”
“பிரச்சனைகளை உண்டுபண்ணும் குழந்தைகளுக்கான திறமையை என்றும் குறைத்து எடை போடாதீர்கள்.”
“இந்த உலகத்தில் பலபேர் தன்னால் முடியும் என்று எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கைக்காரர்கள். சிலபேர் இவர்களைச் சாதிக்க வைத்து வேலை வாங்குபவர்கள்.”
“எதையும் காலந்தாழ்த்திச் செய்வதென்றால் இப்போதே காலந்தாழ்த்திவிடுங்கள்.”
“ஆதாயம் இல்லாமல் திரைவிமர்சனம் செய்வது காலம் மட்டும்தான்.”
“கடவுள் அறிவாளிகளைப் படைப்பாளிகளாக்கினார். மற்றவர்களை விமர்சகர்களாக்கினார்.”
கடைசியாக… இதைச் சொன்னது ஜூல்ஸ் ரெனார்ட் என்ற பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரஞ்சு நாட்டு அறிஞர். “கடவுள் இல்லையென்று சொல்லவில்லை. அவர் இல்லாமல் இருந்தால் அவருக்கு நல்லது.”
முதலில் சொன்ன ஆடை கதையில் யாராவது அந்த அரசரிடம் சொல்லியிருக்கலாம்: “தாங்கள் ஆடை அணியவில்லை என்று சொல்லவில்லை. ஆடை அணிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.”
—
பி.கு. - புத்தகங்களை வாசிக்கிறீர்களோ இல்லையோ வாங்க யோசிக்காதீர்கள் என்று முன்பு ஒருமுறை எழுதியிருந்தேன். RD தனது சந்தாக்காரர்களுக்கு மட்டும் அனுப்பி வைத்த இந்த பிரத்யேகப் புத்தகம் 90-களில் RD வாங்கியவர்களிடம் மட்டுமே இருக்க வாய்ப்புண்டு. முதலில் ஆரம்பித்த பௌத்த கதை போல உலகிலிருந்து காணாமல் போனவை பல, கடைசி ஒன்லைனர் போல வேறு வடிவங்களில் திரும்பி வந்தவை சில. இதே போல இன்று பதிப்பிலேயே இல்லாத சுஜாதா புத்தகம் ஒன்றும் வீட்டு அலமாரியில் உள்ளது. அடுத்த ஆண்டு அதைப்பற்றி எழுதுகிறேன்.