JK

நான் கிராமத்தில் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு பாளையங்கோட்டையில் பதினொன்றாம் வகுப்பு சேர்ந்திருந்தேன். ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் Juliane Koepcke என்று ஒரு பாடம் (lesson). இன்னும் நன்றாக நினைவிலிருக்கும் பாடம். அதற்கு முதல் காரணம் இந்த பெயரை எப்படி உச்சரிப்பது என்று யாருக்கும் தெரியவில்லை. ஜூலியன் கொக்கி, கொபக்கி என்று மனப்பாடம் செய்துகொண்டிருந்தோம். பெரிய வீட்டுப் பையன் ஒருவன் எங்களுடன் படித்தான். அவன் எல்லோரிடமும் வாத்தியார் தவறாக உச்சரிக்கிறார், இந்த பெயரை ஜூலியன் கியோக்கி என்று உச்சரிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தான். அந்த காலத்தில் எல்லா தமிழ் மீடிய வகுப்பிலும் ஆங்கிலம் தெரியும் என்று சீன் போடும் ஒன்றிரண்டு பேர் இருப்பார்கள். அவனது உச்சரிப்பும் தவறு என்று தெரிய எனக்கு வாழ்க்கையில் மேலும் இருபது வருடங்கள் தேவைப்பட்டன.

அந்த பாடம் நினைவிலிருக்க இரண்டாவது காரணம் அந்த பாடம் ஏற்படுத்திய தாக்கம். தாக்கம் ஏற்படுத்தும் விதத்தில் பாடம் நடத்திய ஆங்கில ஆசிரியர். பெயர் உச்சரிப்பைத் தள்ளி வைத்துவிடுவோம். இப்போதைக்கு JK என்று வைத்துக் கொள்வோம்.

JK என்பது ஒரு சிறுமியின் பெயர். 1971-ஆம் ஆண்டு அவளுக்குப் பதினேழு வயது. பதினொன்றாம், பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் வயது. அவளது தந்தை புகழ்பெற்ற ஒரு விலங்கியல் ஆராய்ச்சியாளர். பெரு நாட்டில் அமேசான் காட்டையொட்டி இருந்த புகல்பா என்ற ஊரில் தங்கி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். JK-யின் தாய் ஒரு பறவை ஆராய்ச்சியாளர். தென் அமெரிக்காவில் மிகவும் மதிக்கப்பட்ட ஒரு பெண் ஆராய்ச்சியாளர். 1971-ஆம் வருடம், டிசம்பர் மாதம், கிறிஸ்துமஸ் சீசன். தாயும் மகளும் கிறிஸ்துமஸை அமேசான் காட்டுக்குள் தனியாக இருந்து ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் தந்தையுடன் கொண்டாட பெரு நாட்டின் தலைநகரமான லிமாவில் கடைசி நிமிடத்தில் அடித்துப் பிடித்து டிக்கட் வாங்கி ஒரு விமானத்தில் டிசம்பர் 24-ஆம் தேதி ஏறினார்கள். விமானம் JK-இன் தந்தை இருந்த புகல்பா நகரத்தை நோக்கிப் பறந்தது. 

அமேஸான் காட்டுக்கு மேலே மூன்று கிலோமீட்டர் (பத்தாயிரம் அடி) உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தை மின்னல் தாக்கியது. கிறிஸ்துமஸ் இரவில் நடு வானில் பட்டாசு போல உடைந்து சிதறியது. யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லா உயரத்தில் உடைந்தது. JK அந்த விமானத்தில் இல்லையென்றால் இது வரலாற்றில் மற்றொரு விமான விபத்து என்று கொஞ்ச காலம் பேசி மறந்திருப்பார்கள். தமிழ்நாடு வரை பள்ளிப் பாடப்புத்தகத்திலெல்லாம் வந்திருக்காது.

பதினேழு வயது JK கண்விழித்த போது அமேசான் காட்டுக்கு நடுவே ஒரு மரத்தடியில் அவள் அமர்ந்திருந்த அதே சீட்டுடன், சீட் பெல்ட்டுடன் இருந்தாள். பக்கத்து சீட்டில் இருந்த தாய் இல்லை. பறந்து கொண்டிருந்த விமானமும் இல்லை. அந்த சிறுமி விபத்தில் பிழைத்தது ஏதோ கடவுள் நடத்திய மகத்தான அவல நாடகம் என்று கதை முடிந்திருக்கும். அதன் பிறகு நடந்ததெல்லாம் JK-யின் விடாமுயற்சி. 

அமேசான் காடு ஐம்பத்தைந்து லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட காடு. இந்தியாவை விட ஒன்றரை மடங்கு அதிகம் அதன் பரப்பளவு. அந்த காட்டிற்குள் என்னென்ன மரங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள், இன்ன பிற இருக்கின்றன என்று இன்றுவரை கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த காட்டிற்குள் விழுந்துகிடந்தாள் அந்த பதினேழு வயது JK. உடலெங்கும் காயங்கள். கழுத்தெலும்பு முறிந்திருந்தது. ஒரு கண் சரியாகத் தெரியவில்லை. இருந்தாலும் எழுந்து கொஞ்ச தூரம் நடந்து சென்றாள். விமானத்தில் இருந்து விழுந்திருந்த சில லக்கேஜுகள் சிதறிக்கிடந்தன. அவற்றில் ரொட்டித் துண்டுகள் இருந்தன. வாயில் வைக்க முடியாத நிலையில் இருந்தன. அந்த பைகளில் இருந்த மிட்டாய் பாக்கெடுகளை எடுத்து வைத்துக் கொண்டாள். எல்லாம் கிறிஸ்துமஸைக் கொண்டாட பயணிகள் வாங்கி வைத்திருந்தவை. 

சிறுவயதில் அவள் கற்றுக் கொண்டிருந்த ஒரு சர்வைவல் பாடம் அவளது நினைவுக்கு வந்தது. “எங்கேயாவது காட்டில் தனியாக மாட்டிக் கொண்டால் ஏதாவது நீர் ஓடும் ஓடையைக் கண்டுபிடி; அந்த ஓடை ஏதாவது ஓர் ஆற்றில் போய்ச் சேரும்; ஆற்றின் பாதையிலேயே செல்; ஏதாவது மக்கள் குடியிருக்கும் பகுதி வரும்”. அந்த ஒரு பாடத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு ஓரு நீரோடையைக் கண்டுபிடித்து அதன் வழியே நடக்க ஆரம்பித்தாள். அவளது பசிக்கு மிட்டாய், தாகத்துக்குக் குடிக்க ஆற்று நீர். அவளைக் கடிக்க அமேஸான் காட்டின் பூச்சிகள். பகல், இரவு என்று விடாப்பிடியாக நடந்தாள். மரத்தடிகளில் இலைகளை வைத்து மூடிக்கொண்டு தூங்கினாள். பதினோறு நாட்கள் நடந்து கடைசியில் ஒரு கிராமத்தை வந்தடைந்தாள். அந்த கிராமவாசிகளை அவள் கண்டுபிடித்த போது அவள் உடலிலிருந்த காயங்களில் புழுக்கள் வாழ ஆரம்பித்திருந்தன. அவர்கள் பச்சிலை மருந்து கொடுத்து, ஆம்புலன்ஸைக் கூப்பிட்டு… அவள் பிழைத்தது 1971-இல் உலகச் செய்தியானது. பதினொன்றாம் வகுப்பில் பாடமானது. ஹாலிவுட் படமெல்லாம் வந்திருக்கிறது. 

JK மற்றும் அவளது பெற்றோர் எல்லாம் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள். பெரு நாட்டில் தங்கி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தவர்கள். Juliane Koepcke என்ற பெயரைச் சரியாக உச்சரிக்க ஜெர்மன் மொழி படித்திருந்தால் மட்டுமே முடியும் என்று எனக்கு ஜெர்மனி வந்த பிறகுதான் தெரிந்தது. நாக்கைச் சுழற்ற வேண்டும். நமக்கு சுலபமாக வராது. 

அவள் பிழைத்த கதையுடன் பதினொன்றாம் வகுப்பு பாடம் முடிந்துவிட்டது. அதன் பின்னால் அவள் என்ன ஆனாள் என்று சமீபத்தில் தேடிப்பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. அவள் என்பதை அவர் என்று மாற்றிவிடுகிறேன். எல்லாம் முடிந்து அதன் ட்ரோமாக்களிலிருந்தெல்லாம் அவர் விடுபட்டுத் தன் பெற்றோரின் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்திருக்கிறார். அவரது தந்தை விலங்கியல் அறிஞர் என்றும், அவரது தாய் பறவை ஆராய்ச்சியாளர் என்றும் மேலே சொல்லியிருந்தேன். JK ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் வாங்கியது அமேசான் காடுகளில் வாழும் வவ்வால்கள் பற்றி. பறவையாக வாழும் விலங்கு! பூச்சிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானி ஒருவரைத் திருமணம் செய்திருக்கிறார். இப்போது JK-வுக்கு வயது எழுபது. ஜெர்மனியின் மியூனிக் நகரில் வாழ்ந்து வருகிறார். 

1990-களில் ஒரு டாகுமென்டரிக்காக JK-வை மறுபடியும் அவர் விழுந்த இடம், நடந்து வந்த பாதை, அவர் வந்து சேர்ந்த கிராமம் என்றெல்லாம் கூட்டிச் சென்றார்கள். யூட்யூபில் உள்ளது. அந்த கிராமத்துவாசிகள் அவரை மீண்டும் அடையாளம் கண்டுகொண்டதெல்லாம் மனதை நெகிழ வைக்கும். JK-வின் இந்த உண்மைக் கதையை தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு 1990-களில் வைத்திருந்ததை எண்ணி இன்றும் வியக்கிறேன்.