07 Apr
07Apr

பெண்களைப் பார்க்கும் ஆண்களைப் பார்க்கும் பெண்


டீ கூனிங் (de Kooning) என்பவர் பிகாசோவுக்கு இணையாகக் கருதப்படும் ஓர் ஓவியர். அவர் வரைந்த ஒரு படத்தை இங்கே இணைத்திருக்கிறேன். முதலில் இந்த படத்தில் இருப்பது ஒரு பெண் என்பது பாமர மூளைகளுக்கும் புலப்பட்டுவிடும். பெண்கள் என்ற தலைப்பில் 1950-களில் சில ஓவியங்களை டீ கூனிங் வரைந்தார். அதில் பெண்-2 என்ற ஓவியம் இது. இங்கே நான் எழுதுவதை மேலும் வாசிப்பதற்கு முன் இந்த ஓவியத்தை முழு ஸ்க்ரீனில் வைத்து கவனித்து கிறுக்கல்கள் தவிர வேறு என்னவெல்லாம் உங்கள் மனதில் தோன்றுகிறது என்று யோசியுங்கள். உங்கள் கண்ணில் என்னவெல்லாம் தென்படுகின்றன? மாடர்ன் ஓவியங்களைப் பார்ப்பது ஒரு process. பார்த்தவுடன் ஈர்க்காது, பார்க்கப் பார்க்க ஈர்க்கும்.

 அவளது விரிந்த கண்கள். பரவசப் புன்னகை. இந்தப் புன்னகையின் அர்த்தம் புரிய ஓவியத்திற்குள் இன்னும் பயணிக்க வேண்டும். அவளது தோற்பட்டைகளைப் பாருங்கள். ஐ படத்தில் பாடி பில்டராக வரும் விக்ரமின் தோள்கள் போல இருக்கும். ஆண் போன்ற தோள்களுக்கு நடுவே பெரிதாக்கப்பட்ட பெண் மார்பகங்கள். இப்போது கீழே வாருங்கள். அவள் தொடைகளை விரித்து உட்கார்ந்திருக்கிறாள். கை விரல்களில் சில நீண்டிருக்கின்றன. பிறப்புறுப்பு ஏதும் படத்தில் தென்படவில்லை. செந்நிறத் தூரிகை வண்ணங்கள் தொடைகளிலும், மார்பிலும், கழுத்திலும், அவள் தலையிலும். படத்தின் பின்னணி தூரிகைகளால் வரையப்பட்டு அவள் உடலும் அதே தூரிகைகளால் வரையப்பட்டு அவளது உடல் எது பின்னணி (சமுதாயம்) எது என்று பிரிக்கமுடியாத, ஆனால் உயிருள்ள ஒரு பெண்ணின் உடல். விரிந்த கண்கள். பரவசப் புன்னகை. (இப்போதுதான் இந்த ஓவியத்தைப் பார்ப்பீர்கள். முதல் பத்தி முடித்தவுடன் பார்த்திருக்க மாட்டீர்கள்.)

படைப்பு என்பது ஒரு முக்கோணம். படைப்பாளி-படைப்பு-பார்வையாளர். ஒன்று நகர்ந்தால் கோணம் மாறும். ஒன்றைத் தூக்கிவிட்டால் அங்கே ஒரு கோணமும் இருக்காது. இந்த மூன்று கோணங்களில் படைப்பாளி, பார்வையாளர் என்ற இரண்டு கோணங்களில் ஆண், பெண் என்ற பாலியல் இருக்கிறது. அதனால், படைப்பின் பாலியல் இந்த இரண்டு கோணங்களால் தீர்மானிக்கப்படுகிறது.

படைப்பாற்றலுக்கு எல்லையே இல்லை. ஒரு பதினான்கு வயது சிறுமிக்கு இறக்கை முளைக்கிறது, வால் முளைக்கிறது, அவள் வானில் பறக்கிறாள், சாகசங்கள் பல செய்கிறாள் என்று கதை எழுதலாம். நடக்கத் தடுமாறும் தாத்தா எண்பது தடிமாடுகளை அடித்து வானில் பறக்கவிடுவது போல காட்சியமைக்கலாம். “என்டீ இப்படி ட்ரெஸ் போட்டிருக்க? உனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து அவள் இப்படி ட்ரெஸ் போட்டுத் திரிந்தால் என்னவாகும்னு யோசிச்சுப் பார்…”, என்று ஒரு தாய் தன் பெண்ணைச் சிந்திக்கச் சொல்வதாக ஓர் ஆண் (அல்லது பெண்) வசனகர்த்தா அருள்வாக்கு அருளலாம். படைப்புகள் சமுதாயத்தில் என்ன தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்று அதிகம் விவாதிக்கிறோம். ஆனால் ஏன் அந்த படைப்பாளியின் மண்டைக்குள் இப்படிப் படைக்கவேண்டும் என்று தோன்றியிருக்கிறது என்று அந்த தனிமனிதரை அதிகம் ஆராய்வதில்லை.

ஓர் ஆண் ஒரு பெண்ணைக்கூப்பிட்டு அவளைப் பெண்ணைப் போலச் சிந்திக்க வைக்க முடியும். படைப்பாளிகளால் இதை எளிதாகச் செய்யமுடியும். கண்ணீர்க் காட்சிகள் முதல் போர்னோகிராபிக் காட்சிகள் வரை. ஒரு பெண்ணைப் பெண்ணாகச் சிந்திக்க வைக்கும் அவனால் ஒரு பெண்ணாகச் சிந்திக்க…முடியாதென்றே சொல்லலாம். ஆணோ, பெண்ணோ ஒரு பெண்ணின் உடலிலிருந்து உந்தி வெளியே தள்ளப்பட்டவர்கள். தனக்குள் இருக்கும் பெண்மையை, தனக்குத் தெரிந்த பெண்மையை அந்த ஆண் படைப்பாளி அவன் படைத்த பெண் மூலம் வெளிப்படுத்துவான். சிலப்பதிகாரம் போல. ஆண்கள் பெண்களைப் பலவிதமாகப் படைத்திருக்கிறார்கள். அப்படி ஆண்கள் படைத்த பெண்களைப் பெண்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதையும் தாண்டி, இப்படிப் பெண்களைப் படைத்த ஆண்களைப் பெண்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பது பல பெண்களே அறிந்திராத இன்னும் டீப்பான விஷயம். 

“A Woman Looking at Men Looking at Women” - “பெண்களைப் பார்க்கும் ஆண்களைப் பார்க்கும் பெண்” (இது போன்ற ஆங்கிலச் சொற்றொடர்களைத் தமிழில் ரிவர்ஸ் கியரில் மொழிபெயர்க்க வேண்டியிருக்கிறது) -  சிறப்பான கட்டுரைகள் அடங்கிய ஒரு புத்தகம். நான் கடந்து வந்த சமகாலத்தில் எனக்குப் பரீட்சயம் இல்லாத இத்தனை விஷயங்கள் இருந்திருக்கிறதா, இருக்கிறதா என்று குறைந்தபட்சம் எனக்கு ஆழமாக உணர்த்திய புத்தகம். சிரி ஹூஸ்வெட் என்ற பெண்மணி சில ஆண்டுகளுக்கு முன் எழுதி வெளிவந்த புத்தகம். பொதுவாக ஒன்றையொன்று வேடிக்கை மட்டுமே பார்க்கும் கலை, அறிவியல், மானுடவியல் என்ற மூன்று துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றவர். இவரது அறிவின் அகலமும், எழுத்தின் ஆழமும் அரிதானது. ஒரு பெண் ஆணைப் போலச் சிந்திக்காமல் பெண்ணைப் போலச் சிந்தித்தால் அவரைப் பெண்ணியவாதி என்று அடையாளப்படுத்தும் இந்த உலகில் இவரும் ஒரு பெண்ணியவாதி. 

வெண்மணிப் பூதி என்று ஒரு பெண் ஒரே ஒரு பாடலை மட்டும் சங்க இலக்கியங்களில் எழுதியிருக்கிறார். குறுந்தொகை 299. டீப்பாக வாசித்தால் டீ கூனிங்கின் ஓவியம் உங்கள் கண்களின் முன் வந்து போகும். உரையெழுதியவர்களெல்லாம் ஆண்கள் என்பதால் அவற்றைத் தள்ளிவைத்துவிடுங்கள்.

Comments
* The email will not be published on the website.