மீன் பிடிக்கும் தூண்டிலுக்கு சங்க காலத்தில் என்ன பெயர்? நுண் கோல்! தூண்டிலில் தொங்கும் நூலுக்குப் பெயர் நாண். வில்லின் நாண் போல. ‘நாண் கொள் நுண் கோல்’ என்றால் தூண்டில், மற்றும் அதிலிருந்து தொங்கும் நூல். இந்த ‘நாண் கொள் நுண் கோல்’ என்ன செய்யும்? மீனைப் பிடிக்கும். ‘நாண் கொள் நுண் கோல் மீன் கொள்ளும்’!
சங்க காலத்தில் பாட்டுப்பாடி இசைக்கருவிகள் இசைக்கத் தெரிந்த கலைஞர்கள் பாணர்கள். அப்படி ஒரு பாணணின் மகள். தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருக்கிறாள்.
“நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண் மகள்”!
நாண், கொள், நுண், கோல், இன், மீன், கொள், பாண், மகள்! Wow! வார்த்தைகளைக் கோர்த்திருக்கிறார் இதை எழுதிய ஐயூர் முடவனார்.
(பிகு - இது ஒரு பெரிய அகநானூற்றுப் பாடல். இன்றைய கலாச்சாரப் பாதுகாவலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பாடல். கீழடியில் கிடைத்த ‘ஆதன்’ வரும் பாடல். இந்த பாடல் பற்றி விரிவாக வேறு ஒரு நாள் 10 GB-க்கு போரடித்தால் எழுதுகிறேன்.)