தமிழ்நாட்டில் தெற்கே வந்தால் சவட்டு, சமுட்டு என்பார்கள். சைக்கிளை நல்லா சவட்டு் என்பார்கள். சவட்டுதல் என்றால் மிதித்தல். இது ஏதோ கொச்சைத் தமிழ் என்று நினைத்து மிதி என்று சொல்லப் பழகிக்கொண்டேன். சவட்டு என்பது இரண்டாயிரம் ஆண்டுகளாக மாறாமல் அதே அர்த்தத்தில் புழக்கத்திலிருக்கும் சங்கத்தமிழ் வார்த்தை என்று கற்றுக் கொடுத்தார் கொத்தனார்.
“வம்ப வடுகர் பைந்தலை சவட்டி கொன்ற யானை…” (அகநானூறு 375)
வம்புக்கு வந்தவர்கள் தலையை யானை சவட்டிக் கொன்றிருக்கிறது. அந்த ரணகளத்திலும் இவ்வளவு அழகான தலைகள் (பைந்தலை) சவட்டு வாங்கியிருக்கின்றனவே என்பது போல டார்க் ஹ்யூமர் போட்டு எழுதியிருக்கிறார் இந்த பாடலை எழுதிய கொற்றனார். இடையன் சேந்தங் கொற்றனார். மிதித்தலும் சங்ககால வார்த்தைதான். சவட்டுதல் கொஞ்சம் ராவாக மிதித்தல் போலத் தெரிகிறது.
இந்த உலகில் மாற்றம் மட்டுமே மாறாதது என்பார்கள். அட ஆமால்ல என்று உடனே ஒத்துக்கொள்வோம். இதற்கு பெயர் platitude bias. பயனற்ற பயாஸ். வித்தியாசமாக சொல்லப்படுகின்றன என்ற ஒரே காரணத்தால் சில போதனைகளைக் கேட்டு ஆச்சரியப்பட்டு அவற்றை உண்மை என்று உள்வாங்கிக் கொள்ளுதல். எல்லாம் மாற்றத்துக்குட்பட்டது என்ற இந்த அரைகுறை ஞானத்தை நம்பி மாறாத விஷயங்களைக் கவனிக்க மறந்துவிடுகிறோம். மாற்றப்பட வேண்டிய விஷயங்களையும் மறந்துவிடுகிறோம்.