நம்மை அசர வைக்கும் சங்ககால வார்த்தைகள் என்று பட்டியல் போட்டால் குறைந்தபட்சம் பத்தாயிரம் தேறும். அதிகபட்சம் எல்லா வார்த்தைகளும் தேறும்.
கையில் கம்பை ஊன்றி உழைப்பாளி படத்தில் வருவது போல நடந்து வருபவர்களைப் பார்த்து ‘தண்டுடைக் கையர்’ என்று சங்ககாலத்தில் வெள்ளிவீதியார் சொல்லியிருக்கிறார். கையில் கம்பை (தண்டை) வைத்திருப்பவர்கள் என்று சொல்லியிருக்கலாம். கம்பை வைத்திருக்கும் கையை உடையவர்கள் என்று அசத்தும் நுட்பத்தில்தான் இன்றைய கவிஞர்களை அன்றைய கவிஞர்கள் காலைச் சிற்றுண்டியாகச் சாப்பிடுகிறார்கள்.
நரைத்துப் போன வெள்ளைத் தலை? வெண் தலை. “வெண்டலை”
“தண்டுடைக் கையர் வெண்டலை” (குறுந்தொகை 146)
இப்போது உங்களை அசரவைக்கும் எம்ஏ எம்ஏ பிலாசபி வகையிலான ஒரு வார்த்தை… ‘ஆ’ என்றால் பசு மாடு என்பது ஓரளவு தமிழ் தெரிந்து ‘ஆ’வின் பால் குடித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். வயதான, வயது மூத்த பசுமாட்டை எப்படி அழைப்பது? “மூதா”! மூத்த ஆ. இதனால்தான் முன்னோர்களை மூதாதையர் என்கிறோமா என்ற நியாயமான கேள்வி நமக்குள் எழலாம். ஆமில்லை.
“மூதா தைவந்த…” (குறுந்தொகை 204) ‘தைவந்த’ என்றால் ‘நக்க வந்த’ என்று அர்த்தமாம். மூதா நக்க வந்த - மூதா தைவந்த! பல்லெல்லாம் விழுந்துபோன வயதான பசு ஒன்று நேற்று தளிர்த்த இளம்புல்லைத் தின்ன முடியாமல் அதை நக்கிப் பார்ப்பதாக இந்த உவமை வருகிறது (…முற்றா இளம்புல் மூதா தைவந் தாங்கு). ‘ஜெனரேஷன் கேப்’ என்று இன்று நாம் சொல்வது.