‘களைஞர்’ என்று தமிழ்ச்சொல் ஒன்று இருக்கிறது. ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை. களைபவர், துன்பங்களைக் களைபவர் என்ற அர்த்தத்தில் வருவது. “…களைஞரோ இலரே” - நற்றிணை 335. துன்பத்தைக் களைபவர் இல்லையே.
‘கிளைஞர்’ என்றும் தமிழ்ச்சொல் ஒன்று இருக்கிறது. மாமன், மச்சான், ஒன்று விட்ட சித்தப்பா என்று கிளை கிளையாக இருக்கும் உறவினர்கள். உறவினர் = கிளைஞர். நற்றிணை 331.
நமக்கு கஷ்டம் வருவதிலும் ஒரு நன்மை உண்டாம். அது என்னவென்றால் அப்போதுதான் நமக்கு யார் உண்மையான உறவினர் என்று தெரியுமாம். வள்ளுவர் சொன்னது. கேடு வந்தால் (கேட்டினும்) ஒன்றை உறுதியாகக் கண்டுபிடித்துவிடலாம் (உண்டு ஓர் உறுதி) உறவினர்களை (கிளைஞரை) எந்த ஸ்கேலை வைத்து அளக்க வேண்டும் என்று (நீட்டி அளப்பதோர் கோல்).