11 Jul

சாப்பிடுவதைக் குறிக்க 14 வகை வார்த்தைகளை சங்க இலக்கியங்களில் உபயோகித்திருக்கிறார்கள். முனைவர் பாண்டியராஜா இவற்றைப் பட்டியலிட்டு சங்க இலக்கியங்களில் அவை எந்த அர்த்தத்தில் உபயோகிக்கப்பட்டிருக்கின்றன என்று அட்டகாசமாக விளக்கியிருக்கிறார். அருந்துதல் (ஆர அமர), குடித்தல் (தேவைக்காக), பருகுதல் (மடக் மடக்கென்று), மண்டுதல் (சர் சர்ரென்று), மாந்துதல் (அளவுக்கு மீறி), மடுத்தல் (ஊட்டி ஊட்டி), அயிலுதல் (வயிறு முட்ட), ஆர்தல் (தினசரி சாப்பிட), கெண்டுதல் (அறுத்துக் கிளறி), கைத்தல் (கையால் ஊட்டிவிட்டு), நுகர்தல் (அனுபவித்து), நுங்குதல் (நுங்கு சாப்பிடுவது போல), மிசைதல் (பசித்து ருசித்து), மெல்லுதல் (அசை போட்டு)!

இதில் பாதி வார்த்தைகள் இன்று புழக்கத்தில் இல்லை. காரணம், எப்படிச் சாப்பிடலாம் என்ற வாழ்வியல் நிலையிலிருந்து நழுவி எதைச் சாப்பிடலாம் என்ற நிலைக்குள் விழுந்திருக்கிறோம். ஆரோக்கியத்தின் அடிப்படை எதைச் சாப்பிடுவது என்பதல்ல, எதை எப்படிச் சாப்பிடுவது என்பது. ‘சாப்பிடுதல்’ என்ற இன்றைய வார்த்தை சங்க இலக்கியங்களில் இல்லை.

இதில் ஆச்சரியப்படுத்தியது நுங்கு. நுங்குக்கும், நுங்கைச் சாப்பிடுவதற்கும் பெயர் நுங்கு. நம் பெருவிரலை ஒரு சைடாக உள்ளே செலுத்தி நுங்கின் கண்களை நெம்பி வெளியே எடுத்து அப்படியே லபக்கென்று வாய்க்குள் அனுப்ப வேண்டும். தவறிவிட்டால் இரண்டு தொடைகளுக்கு நடுவே கீழே விழுந்து மானத்தை வாங்கிவிடும். நுங்கு சாப்பிடுவது ஒரு கலை. இதை யாராவது கற்றுக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆன்ட்ராய்டிலிருந்து ஐபோனுக்கு மாறியவர் போல நுங்கைத் தடவிக்கொண்டிருப்போம். அப்படி வாய்க்குள் அனுப்பிய பின் அந்த சுவை விடாது. இன்னும் அந்த நுங்கின் கண்ணை நோண்டிக் கொண்டிருப்போம். நொங்கு நொங்கென்று நொங்கிக் கொண்டிருப்போம். அது இன்னும் டேஸ்டாக இருக்கும். நுங்கு நுங்கினார் (யாப்பருங்கலத்தில் வருவது).

Comments
* The email will not be published on the website.